நமக்கென ஒரு பிரௌசர்- எபிக்




கடைசியாக அது வந்தேவிட்டது. நமக்கென ஒரு பிரௌசர் வேண்டும் என ஆவலுடன் காத்திருந்த இந்திய இணையப் பயனர்களின் ஆசை நிறைவேறிவிட்டது. "மேட் இன் இந்தியா' என்ற அடைமொழியுடன், இந்தியர்களுக்காகவே
 பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட "எபிக்' என்கிற இணைய உலவி இப்போது இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. இதை உருவாக்கியிருப்பது பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம்.

எத்தனையோ பிரௌசர்கள் அவ்வப்போது வருகின்றன, போகின்றன; இதுவும் பத்தோடு பதினொன்றாகக் காணாமல் போய்விடும் என்று எண்ணியவர்கள் இப்போது கொஞ்சம் திகைத்து நிற்கிறார்கள். வெளியான முதல் வாரத்திலேயே இந்தியர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.  மைக்ரோசாஃப்டின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், மோசில்லா பயர்ஃபாக்ஸ் போன்ற முன்னணி பிரௌசர்களைக் கடந்து, இந்தியர்களைக் கவர்வதற்கு இந்தப் புதிய வரவில் நிறையச் சங்கதிகள் இருக்கின்றன.

முதலாவதாக எபிக் பிரௌசர், உலகளாவிய பொதுச் சந்தைக்கான மென்பொருள் அல்ல. அது இலவசமானது; இந்தியர்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. அதனால், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருடனோ மோசில்லா பயர்ஃபாக்ஸýடனோ போட்டியிடவேண்டிய அவசியம் இதற்கு இல்லை. இந்த ஒன்றே இந்தியர்களைப் பற்றி இழுப்பதற்குப் போதுமானது. இரண்டாவதாக, இது மோசில்லா பயர்ஃபாக்ஸ் பிரௌசரின் நீட்சிதான். அதனால், கூடுதல் வசதிகள் இருக்கும் என்பது அடிப்படையான விஷயம்.

இணையத்தில் நுழைவோரைச் சிரமப்படுத்தும் முதல் பிரச்னை வைரஸ், மால்வேர், ஸ்பேம்வேர் போன்ற நச்சு நிரல்கள்தான். நச்சு நிரல்களைக் கண்டறிந்து அழிக்கும் திறமையான ஆன்டி-வைரஸ் மென்பொருள் இல்லாவிட்டால் கணினியில் உள்ள முக்கியக் கோப்புகளை இந்த நச்சு நிரல்கள் தாக்கி அழிக்கும். சில நேரம் நமது ரகசியத் தகவல்களைத் திருடி, இணையத் திருடர்களுக்கு உதவி செய்யும்.

 இந்தப் பிரச்னைக்கு எபிக் தீர்வு கண்டிருக்கிறது. எபிக்குடன் இணைத்துத் தரப்பட்டிருக்கும் இùஸட் நோட்32 என்கிற ஆன்டிவைரஸ் தொகுப்பு, நச்சு நிரல்களைக் தேடிக் களைகிறது.

 இந்த வசதியைத் தரும் உலகின் முதல் பிரௌசர் என்கிற பெருமையும் எபிக்குக்கு கிடைத்திருக்கிறது. இணையத்தில் இருந்து வரும் நச்சு நிரல்கள் மட்டுமல்லாமல், நமது கணினியில் ஏற்கெனவே இருக்கும் நச்சு நிரல்களையும் இந்த ஆன்டி-வைரஸ் மென்பொருள் கொண்டு அழிக்க முடிகிறது.

 இதுவரை எந்த பிரௌசரிலும் இல்லாத அளவுக்கு 1500-க்கும் அதிகமான "சைட் பார் அப்ளிகேஷன்ஸ்' எனப்படும் ஒருங்கிணைந்த பயன்பாடுகள் எபிக்கில் இருக்கின்றன. பின்னணி வண்ணங்கள், புகைப்படங்கள் என எல்லாவற்றையும் ஒற்றை க்ளிக்கில் மாற்றும் வசதி இருக்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டர், ஆர்குட் போன்ற சமூக வலைத்தளங்களில் மேய்ந்தபடியே மற்ற பணிகளைச் செய்வதற்கும், கணினியில் உள்ள கோப்புகளைக் கையாள்வதற்கும் முடிகிறது.

 இதேபோல, ஜிமெயில், யாஹு மெயில் போன்ற சேவைகளின் மின்னஞ்சல்களையும் இந்தப்  பயன்பாடுகள் மூலமாகவே படிக்கலாம். இவைதவிர, உடனடி கிரிக்கெட் ஸ்கோர், தொலைக்காட்சி சேனல்கள், இசை, விளையாட்டு, வேலைவாய்ப்பு,விடியோ போன்றவற்றுக்கான பயன்பாடுகளும் எபிக்கில் இருக்கின்றன.

 தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், சம்ஸ்கிருதம் போன்ற இந்திய மொழிகளில் தட்டச்சு செய்வதற்கான வசதி மிக எளிமையான முறையில் இணைக்கப்பட்டிருப்பது சிறப்பு. தனி மென்பொருளை நிறுவுவது அல்லது பிற இணையதளங்களில் சென்று தட்டச்சு செய்து எடுத்து வருவது போன்ற தொல்லைகளுக்கு இது நல்ல தீர்வு.

 இந்தியாவிலிருந்து வெளியாகும் செய்தி இணையத் தளங்களின் முக்கியச் செய்திகளை திரட்டித் தரும் வசதியும் எபிக்கில் இருக்கிறது. இப்போதைக்கு மிகச் சாதாரணமான இணையத் திரட்டிகள் போன்ற இந்த வசதி, வருங்காலத்தில் இது கூகுள் நியூஸ் போன்று மிகப் பிரபலமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பிராந்திய மொழி வசதிகளில் உள்ள சில பிழைகளைச் சரி செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தினால், அனைவராலும் விரும்பப்படுவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன.

மைக்ரோசாஃப்டின் எம்எஸ் வேர்டு, ஓபன் ஆபிஸ் ரைட் போல எளிய வடிவிலான வேர்ட் பிராசசர் எனப்படும் சொற் செயலியும் எபிக் இணைத்துத் தருவது மிகச் சிறப்பு. தட்டச்சு செய்வது, பிற இணையத் தளங்களில் இருந்து பிரதி எடுப்பது போன்ற பணிகளைச் செய்வதற்கு இது உதவும். மற்ற முன்னணி இணைய உலவிகளில் இல்லாத வசதி இது.

 "பேக்கப்' எனப்படும் கோப்புகளை இணையத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளும் வசதி நிச்சயமாக அனைவருக்கும் பயன்படும். மைக்ரோசாஃப்டின் ஸ்கைடிரைவ் போல ஜிமெயில் வழியாக இந்த வசதியை எபிக் வழங்குகிறது. ஜிமெயிலை கிட்டத்தட்ட ஒரு எஃப்.டி.பி. போல பயன்படுத்த முடிகிறது.

 இத்தனை வசதிகளையும் கொண்டிருப்பதால் எபிக் இயங்கும் வேகம் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. உண்மையில், மற்ற இணைய உலவிகளை விட கூடுதல் வேகத்துடன் இயங்குவதாகவே மதிப்பிடப்பட்டிருக்கிறது.

 இப்போதைய கணிப்புப்படி, இதுவரை வெளிவந்திருக்கும் மோசில்லா பயர்ஃபாக்ஸ் நீட்சிப் பதிப்புகளில் எபிக் பிரௌசர்தான் சிறந்தது என பெரும்பாலானோர் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். நாட்டில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், பிராந்திய மென்பொருள் சந்தையில் புதிய எழுச்சியை ஏற்படுத்தப் போகிறது என்பதே எபிக்கின் உண்மையான வெற்றி.

பதிவிறக்கம் செய்யhttp://www.epicbrowser.com/

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |




Share your views...

1 Respones to "நமக்கென ஒரு பிரௌசர்- எபிக்"

Baksh சொன்னது…

It is a good information about EPIC. Thank you ! My hats off to you.


29 ஜூலை, 2010 அன்று 6:00 PM
 

© 2010 ஆயங்குடி செய்திகள் All Rights Reserved Thesis WordPress Theme Converted into Blogger Template by Hack Tutors.info